சிறைச்சாலை பேருந்தின் மீது கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பண்டி’ என அழைக்கப்படும் குருப்புகே சத்துரங்க புஷ்பமார என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறைச்சாலை பேருந்து தாக்குதல் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை விசேட பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
இதன்படி குறித்த சிறைச்சாலை பேருந்து தாக்குதலில் 10 பேர் பங்கு கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அங்கொட லொக்கா என்பவரே தலைமை தாங்கியிருப்பதாகவும், அவர் காவல்துறை அதிகாரியின் சீருடைக்கு ஒத்தவாறான உடை அணிந்து வந்திருந்ததாகவும் ஏனைய 09 பேரும் சிறைச்சாலை அதிகாரிகளின் உடையில் வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தெற்கு பாதாள குழுத் தலைவரான மதுஷ் என்பவரின் உதவியாளரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.