அஜ்மலுக்கு ஐ.சி.சி ஒழுக்காற்று நடவடிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்து பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தது.

5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு முறையை மாற்றி அமைத்த பிறகு அஜ்மல் தாக்கத்தை ஏற்படுத்தாததால் பாகிஸ்தான் அணியில் இடம் பெற இயலவில்லை.

இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீரர்கள் அஸ்வின், ஹர்பஜன்சிங் ஆகியோரின் பந்துவீச்சு முறையற்றதாக இருப்பதாகவும், அவர்கள் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்றும் சயீத் அஜ்மல் சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.

ஹர்பஜன், அஸ்வின் பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தினால் 15 டிகிரிக்கும் அதிகமாக முழங்கையை மடக்குவதை காணலாம் என்று கூறினார். இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவாக ஐ.சி.சி. செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஐ.சி.சி. கொள்கை விவகாரங்களை விமர்சித்த சயீத் அஜ்மல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, வீரர்களின் நடத்தை விதிமுறைகளை சயீத் அஜ்மல் மீறியுள்ளார். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அஜ்மலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் பெற்ற 48 மணி நேரத்துக்கு பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.