அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்தும் போது நாமும் வீதிக்கு இறங்குவோம் என பிரதமர் எச்சரித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் எம்மை எச்சரித்தாலும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசு முன்னெடுத்தால் நாம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம் என வாசுதேவ குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மக்கள் விரோதமாக இருக்கும்போது அவற்றிற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அது ஜனநாயக உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது.
ஒருசில சந்தர்ப்பங்களில் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
இந்த நிலையில், பிரதமருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் “நாமும் அடாவடியாக வீதிக்கு இறங்கத்தயார், அவ்வாறு இறங்கினால் என்ன நடக்கும் என தெரியாது” என்று ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதமர் எச்சரித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.