அடுத்த IPL இனை வெளிநாட்டில் நடத்த ஆலோசனை

‘அடுத்த ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்த ஆலோசனை செய்யப்படும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மராட்டிய மாநிலத்தில் நடத்த இருந்த 12 ஆட்டங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் அங்கு போட்டியை நடத்தவும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை எதிர்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.பி.எல். போட்டியை இடமாற்றம் செய்வது புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த ஆண்டுக்கான (2017) ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்தலாமா? என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டில் அந்த நேரத்தில் தயாராக இருக்கும் மைதானங்கள் குறித்து ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் பரிசீலனை செய்து அந்த சூழ்நிலைக்கு தக்கப்படி முடிவு எடுக்கும்.

கிரிக்கெட் மைதானங்களை பராமரிக்க தண்ணீர் கிடைக்கும் வழிமுறைகள் குறித்து சோதனை செய்யுமாறு மாநில கிரிக்கெட் சங்கங்களை கேட்டு இருக்கிறோம். லோதா கமிட்டி சிபாரிசின் படி, போட்டியில் ஓவர்களுக்கு இடையே டெலிவிஷனில் ஒளிபரப்பாகும் விளம்பரத்தின் அளவை கட்டுப்படுத்தினால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படும் பென்சன் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான அகாடமி தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.

ஏற்கனவே, பாராளுமன்ற தேர்தல்கள் காரணமாக 2009-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவில் முழுமையாக நடந்தது. 2014-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டியின் முதல் பகுதியில் 15 நாட்கள் ஆட்டம் ஐக்கிய அரபு எமிரேட்சில் அரங்கேறியது என்பது நினைவுகூரத்தக்கது.