அட்லாண்டா விமான நிலையத்தில் மின்தடை – 1000 விமானங்கள் இரத்து…

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 1000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 2500 விமானங்கள் 2.5 லட்சம் பயணிகள் வரை கையாளும் இந்த விமானம் உலகின் மிக பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், நேற்று விமான நிலையத்திற்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் தடை ஏற்பட்டமை காரணமாக விமான நிலையம் முழுவதும் கணினி சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடங்கியமையினால், 1000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் இரத்தானதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பூமியில் புதைக்கப்பட்டுள்ள மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிந்தது மின் தடைக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை அடுத்து, நேற்று(17) நள்ளிரவு மின் சேவை சீரானது. இருப்பினும், இன்று(18) புறப்பட இருந்த பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.