அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம்

அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து அவற்றை செலுத்திய சாரதிகளை கண்டுபிடிக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைக்கு 1,800 பஸ் வண்டிகள் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பயணிகள் போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்தார்.

நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்திலிருந்து அந்த சகல பஸ் வண்டிகளும் கண்காணிக்கப்பட்டு அதிவேகமாக செல்லும் சாரதிகளை உடனடியாக தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து தவறிழைக்கும் சாரதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களை பணியிலிருந்து நீக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிகள் போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.