ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் செயற்பாட்டை வைத்தே அவருடைய சுயாதீனத் தன்மை குறித்த தீர்மானத்துக்கு வர முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை வைத்திய சபைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் நேற்று(17) விஜயம் செய்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அத்துரலிய ரத்ன தேரரின் தீர்மானம் அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என தாங்கள் கருதுகிறீர்கள் என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளித்தார்.
அத்துரலிய ரத்ன தேரர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளார். அவர் பாராளுமன்றத்தில் எங்கு அமரப் போகிறார் எனவும், அவரது நிலைப்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றன எனவும், ஜனாதிபதி செயலகத்தில் அவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளில் அவர் விலகுவாரா என்பது குறித்தும் நாம் அவதானமாக இருக்கின்றோம்.
இவை தொடர்பில் தேரரின் நடவடிக்கைகளை வைத்தே இவருடைய சுயாதீனம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.