அநுராதபுரம், நெலுபாவ ஆடை தொழிற்சாலையில் 13 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர் கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகிறார்.
அநுராதபுர நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் நிர்மலி பிரியதர்சனி காரியவசம் முன்னிலையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதிவான், ஹிதோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சிக்கு உத்தரவிட்டார்.
புது வருட விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த ஆடை தொழிற்சாலையிலிருந்து இந்த பாரிய அளவிலான கொள்ளை சம்பவம் நடை பெற்றதாகவும் சந்தேக நபர்கள் கட்டுநாயக்கா மற்றும் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஹிதோகம பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல வீரசிங்க பணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.