சீரற்ற காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை உளவியல் ரீதியாக சீர் செய்வதற்கு விஷேட உளவியல் ஆலோசனை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள், சகோதர்கள், உறவினர்கள், நண்பர்களை மற்றும் சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை உளவியல் ரீதியாக பலமடையச் செய்து, அவர்களை மீண்டும் பலமிக்கவர்களாக சமூக மயப்படுத்தும் நோக்கில் குறித்த இந்த விஷேட மனநிலை ஆலோசனை வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போதைக்கு நாட்டின் ஏனைய பாடசாலைகளில் பணி புரிகின்ற மனோதத்துவ ஆசிரியர்களின் மற்றும் பொறுப்புள்ள ஏனைய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன்போது தேசிய பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள் உள்ளிட்ட மாணவர்களை இணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களுடன் சுக துக்கங்களை பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.