அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிக்கும் வரையில் வீடுகளுக்கு செல்ல வேண்டாமென கோரிக்கை

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்த அடை மழை குறைந்து காணப்படினும் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ்பவர்கள், அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிக்கும் வரையில் தமது வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என அம்மையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நேற்று (23) வரை 57290 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 42 ஆயிரத்து 927 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவு என்பன காரணமாக தமது  வாழ்விடங்களை விட்டும் இடம்பெயர்ந்து 390 தற்காலிக முகாம்களில் உள்ளதாக அம்மையம் அறிவித்துள்ளது.

86910 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 48 ஆயிரத்து 476 பேர் மொத்தமாக இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக முகாம்களில் இல்லாதவர்கள் தங்களது உறவினர்கள் வீடு மற்றும் வேறு இடங்களில் தங்கியுள்ளதாகவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த அனர்த்தங்கள் காரணமாக நேற்று (84) மாலை வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 116 ஆக காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.