அனைத்து ரயில்களிலும் வை-பை, கேமரா வசதி…

விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் வை-பை, கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்து கொடுக்கப்படும் என மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களையும் சுத்தமானதாகவும், பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளும் நிறைந்தவையாகவும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், வை-பை இணையதள வசதி செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக செலவு காரணமாக தேஜாஸ் மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி. திரைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையை உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றுவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.