அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் – வடகொரியா…

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டனர்.

தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா நேசக்கரம் நீட்டியதும், வாஷிங்டனையும் மிரட்டும் விதத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சோதனைகளை மேற்கொண்டனர்.

சமீபகாலமாக கிம் ஜாங் உன்னின் போக்கு மாறத் தொடங்கி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் நட்புறவு மேற்கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஐ.நா. விதித்த பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியா, வடகொரியா அணிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே அணியாக பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய தூதர் கிம் யோங் சோல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு முன்னதாக தென்கொரிய அதிபர் ‘மூன் ஜே-இன்’னையும் சந்தித்து பேசியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. இதன்போது, கிம் யோங் சோல், வடகொரிய தலைவர் அமெரிக்காவுடன் நட்புறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், இதற்காக தாராளமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மூன் ஜே-இன் அமெரிக்காவும், வடகொரியாவும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படைப்பூர்வமாக தீர்வுகாணவேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

ஏற்கனவே தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் மூலம் தற்போது அடுத்தகட்ட முயற்சியை வடகொரியா மேற்கொண்டிருப்பது அரிதானதொரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனால் அமெரிக்கா-வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே வடகொரிய தூதர் கிம் யோங் சோலை தென்கொரியாவுக்கு வர அனுமதித்ததை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடந்த மைதானத்தின் வெளியே திரண்டு தென்கொரிய-அமெரிக்க கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.