அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் மடிக்கணணி எடுத்துச் செல்ல தடை..

உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் மடிக்கணணி (Laptop) எடுத்துச் செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வந்து, செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் நிறைந்துள்ள விமானத்தைத் தகர்ப்பதில் தீவிரவாதிகள் ஆர்வம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் துருக்கி ஆகியவற்றின் 10 விமான நிலையங்களில் இருந்து மடிக்கணணி எடுத்துவர அமெரிக்க அரசு மார்ச் மாதத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. நவீன ரக அபாயம் அச்சுறுத்தி வருவதால் குறித்த இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் திகதி குறித்து அவர் எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

அந்நாட்டு உளவுத்துறை தொடர்ந்து வழங்கி வரும் தகவல்களை வைத்தே பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாகவும் ஜான் கெல்லி தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே பல விமான நிலையங்களில் கைப்பைகளை சோதிப்பது நடைமுறையில் இருக்கிறது. இதை நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)