அமெரிக்க விமானத்தில் முஸ்லிம் பெண்ணுக்கு இனத்துவேசத்தைக் காட்டிய பணிப்பெண்

‘நார்த்வெஸ்டர்ன்’ பல்கலைக்கழகத்தில் மத நம்பிக்கை துறையின் இயக்குநராக பணியாற்றும் தஹரா அகமது எனும் இஸ்லாமிய பெண்  சமீபத்தில் சிகாகோவிலிருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானப் பணிப்பெண்ணிடம் அவர் கோக்கோ கோலா  கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏன் என்று தஹரா கேட்டபோது  புத்தம் புதிய கோலா கேனை தர எங்களுக்கு அனுமதி இல்லை. அதை நீங்கள் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் தர முடியாது என்று விமானப் பணிப்பெண் கூறியுள்ளாள்.

ஆனால் எனக்கு அருகில் உள்ளவருக்கு திறக்கப்படாத பீர் கேனை கொடுத்தீர்களே என்று நான் கேட்டபோது அதற்கு அவரிடம் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் பெரும் வேதனை அடைந்த தஹரா தனது கசப்பான அனுபவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனக்கு நேர்ந்த அவமானத்தை விமான பயணத்தின்போதே பேஸ்புக் பக்கத்தில் தஹரா சேர்த்தார். அந்த போஸ்ட் தற்போது ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது.

தஹராவுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு டிவிட்டர், பேஸ்புக்கில் தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  இதற்கிடையே, யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தை புறக்கணிப்போம் என்ற கோஷம் டிவிட்டரில் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. நடந்த சம்பவம் தவறான புரிதலின் பேரில் நடந்தது. இதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்று அது கூறியுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்திற்காக இவர் ஆற்றிய பணிகளுக்காக வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமாவால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.