“அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள். இல்லையேல் – எம்பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது சலீமுக்கு வழங்குங்கள்.”
இவ்வாறு – தேசிய காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அதாவுல்லாவுக்கு சவால் விடுத்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் – எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அமைச்சு பதவியை பெற்று அதாவுல்லாவால் எந்தவொரு வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம்.
அமைச்சு பதவியை பெற்று நீங்களும் உங்களை சார்ந்தோரும் சொகுசாக வாழலாமே ஒழிய மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாது.
இவ்வாறு – எவ்வித பிரயோசனமும் அற்ற அமைச்சு பதவியை பெறுவதை விடுத்து , நீங்கள் ஏற்கெனவே வாக்குறுதி அளித்த சாய்ந்தமருது நகர சபையை கேட்டுப் பெறுங்கள்.
சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை வைத்து பெருமளவு வாக்குகளை பெற்று எம்பியானீர்கள். போலி வர்த்தமானி மூலம் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றினீர்கள்.
தேர்தல் ஒன்று வரலாம் என்ற கதையாடல்கள் மேலோங்கி வரும் நிலையில் , மீண்டும் சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை உயிர்ப்பிக்க முயல்கிறீர்கள். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடல்ல..
அமைச்சு பதவி வேண்டாம் ; நான் வாக்குறுதி வழங்கி , என்னை பாராளுமன்றம் அனுப்பிய சாய்ந்தமருது மக்களுக்கான நகர் சபையை தாருங்கள். இல்லையேல் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக உங்களால் கூற முடியுமா..?
ஆகக் குறைந்தது – எம்பி பதவியை இராஜினாமா செய்து , சாய்ந்தமருது சலீமுக்கு வழங்கி – சாய்ந்தமருது மக்களுக்கு நன்றி செலுத்துங்கள்.
இவற்றை விட – எம்பி பதவியும் அமைச்சு பதவியும்தான் தனக்கு முக்கியம் என்றால் – தயவுசெய்து இனிமேல் , சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் என்றும் யஹியாகான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.