அரசின் முடிவின் பிரகாரமே உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும்

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே போட்டியில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.

இதற்கிடையில் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி விலகினால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) எச்சரிக்கை செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி கருத்து தெரிவிக்கையில், ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஐ.சி.சி. எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கவில்லை. அரசின் அனுமதியை பொறுத்து தான் எங்கள் அணி பங்கேற்பது முடிவாகும்’ என்றார்.