அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டாலும் நாட்டு மக்களே இறுதித் தீர்மானம் எடுப்பார்கள் என, அரசியலமைப்பு சபை செயலகத்தால் நேற்று(28) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் குறிப்பிட்டார்.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்சளவில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு சகல கட்சிகளும் இணங்கியிருப்பதுடன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிரிவினை நீங்கி, முதலமைச்சர்களுக்கான அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பௌத்த மதத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. அதேநேரம், ஏனைய மதத்தவர்களும் தங்களுடைய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.