அரசியலமைப்பை மாற்றுவது குறித்து எதிர்பார்ப்பு – சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் சகலரின் ஆதரவு மற்றும் இணக்கப்பாட்டுடன், நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை முன்வைப்பதற்கு நாங்கள்  எதிர்பார்த்துள்ளோம் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதியறிக்கை, அக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவினால், நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சபாநாயகர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

“யதார்த்தத்துக்கு உகந்த வகையில், அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்பதே நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். அப்படியில்லாவிடின், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாகும். அது மக்களின் உரிமைகளை பாதுகாப்பவையாக இருத்தல் வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும், “நாடாளுமன்றத்தின் அதிகாரம், அரசியலமைப்பை மாற்றுவதற்காகும். ஆகையால், நான் விசேடமாக உறுதியளிக்கின்றேன். சகலருடைய கருத்துகளைப் பெற்றுக்கொண்டு, நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பை கட்டாயமாக  முன்வைக்கமுடியும்” என்றும் அவர் கூறினார்.