அரசியல் தீர்வொன்றை அரசு முன்வைக்கத் தவறினால் வன்முறை வெடிக்கும் -TNA எச்சரிக்கை..

நல்லாட்சி அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடிய போதே சம்பந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று(05) கொழும்பில் இடம்பெற்ற குறித்த இந்த சந்திப்புத் தொடர்பாக சம்பந்தன் கூறியதாவது;

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தவறிழைக்க முடியாது. அதனால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவது அவசியம் என்றும் யாப்பு உருவாக்க நடவடிக்கைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்படுவதாக சுட்டிக்காட்டியதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்க்கின்றனர்.

ஆகவே அந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட நிலையிலான அதிகாரப் பரவலாக்கம் ஒன்றையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களும் இணைக்கப்படுவதால் சிங்கள மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. ஏனெனில் பிரிவினைக்கு அரசியல் யாப்பில் இடமில்லை என எடுத்துச் சொன்னதாக சம்பந்தன் கூறினார்.

அதேவேளை யுத்தம் காரணமாக 50% தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் நீதியான அரசியல் தீர்வு ஒன்றை எதிர்ப்பார்க்கின்றனர்.

சாத்தியப்படக் கூடிய தீர்வில் அவர்கள் அக்கறையுடன் இருக்கின்றனர் எனவும், காணி அபகரிப்பு செயற்பாடுகளை கைவிடுதல், காணிகளை விடுத்தல். அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளில் நல்லாட்சி அரசாங்கம் கூடுதல் கவணம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுட்டிக்காட்டியதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

அதேவேளை பிரித்தானிய அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்தமை தொடர்பாக எதிர்க்கட்சி அலுவலகம் நேற்று(05) இரவு ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

 

(rizmira)