அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ள, இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல…

அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு, எந்தவொரு அரசியல் கட்சியும் இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவுத் தூபியை நேற்று(11) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரைகளையும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவதையும் தற்போதைய அரசாங்கம் நிறுத்தியது.

இராணுவத்தில் இருந்த சிலர் வேறு சில நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டனர். எனினும், அது இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடல்ல.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட இடமளிக்காத அதேவேளை, அவர்களுக்கான உயரிய கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.