நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அராஜக நிலைமைக்கு இன்றைய கூட்டணி அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறைந்தது 2015 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை.
புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், அந்த நிதி வழங்கப்படும் என 100 நாள் அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் இதுவரை அந்த நிதி கிடைக்கவில்லை.
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படவுள்ளது. ஆனால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைக்கவும் முன்பள்ளிக்கான கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து கொடுக்கவும் மருந்தகத்திற்கு மருந்துகளை வழங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது.
ஊழல், மோடிசகள் விடயத்திலும் இதே நிலைமைதான். நாடாளுமன்றம் கூடிய இரண்டாவது நாளில் கடந்த 22 ஆம் திகதி எமது கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க அவன்கார்ட் நிறுவனம் சம்பந்தமாக விசேட உரையொன்றை ஆற்றினார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை ஒன்று பற்றிய கட்சி ஒன்றின் தலைவர் விசேட உரையை நிகழ்த்துவார்.
அவன்கார்ட் சம்பந்தமாக பிரதமரிடம் எழுப்பட்ட கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. முழுமையான பதிலை வழங்காவிட்டாலும் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தாவது பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் சுனில் அந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.