அரசுடன்த இணைய தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் தேசிய மின்சாரத் தேவையை நிறைவேற்றி எதிர்வரும் பத்து வருடங்களில் நாட்டை மின்சக்தித் துறையில் தன்னிறைவு பெறச்செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மின்சக்தித் துறையில் புதிய முதலீடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.

காற்று மூலமான மின்சாரக் கருத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு இதன்போது ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதற்காக தனியார்துறையின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

சூரிய ஒளயின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் இலங்கை திட்டமிட்டுள்ளதுடன், இது தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விக்டோரியா மின் உற்பத்தி நிலையத்தை விஸ்தரிப்பது தொடர்பாகவும் இங்கு முன்மொழியப்பட்டதுடன், அதுதொடர்பான சாத்தியப்பாடுகளை கண்டறிந்து தமக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மின்வலு, மீள்பிறப்பிக்கத்தக்க மின்சக்தித்துறை அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் படகொட ஆகியோரும் மின்சார சபை மற்றும் இலங்கை முதலிட்டுச் சபை பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை முதலீட்டாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.