அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளங்கள் 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டால், சம்பள முரண்பாட்டு நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளங்களும் 2500 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.
இவ்வாறு 2500 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்பட்டால் ஒட்டு மொத்த சம்பள விகிதாசாரமும் சீர்குலையும். இன்னும், தற்போது காணப்படும் சம்பள விகிதாசாரத்தை கருத்திற் கொண்டே அடிப்படைச் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும்.
இடைநிலை ஊழியருக்கு 1 பங்கு அதிகரித்தால் அதன் நான்கு மடங்கினால் உயர் அதிகாரிக்கு சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். பொதுவாக இது 1:4 என அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு சம்பள விகிதாசாரம் கருத்திற் கொள்ளப்படாது அனைவருக்கும் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டால் அது சம்பள முரண்பாட்டையே ஏற்படுத்தும் எனவும், அரச ஊழியர்களின் சம்பள இடைவெளி 1:3:5 என குறைவடையக் கூடுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1:4 என்ற சம்பள விகிதாசாரமும் நாட்டின் புத்திஜீவிகளை அரச சேவையில் தக்க வைத்துக் கொள்ள போதுமானதாக அமையவில்லை.
இவ்வாறான ஓர் நிலையில் 1:3:5 என்ற விகிதாசாரத்தில் அரச ஊழியர்களின் சம்பள இடைவெளி காணப்பட்டால் புத்திஜீவிகளை அரசாங்க சேவை இழக்க நேரிடும் பல வெளிநாடுகள் செல்லக் கூடுமெனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.