அரச சாட்சியாளர் பற்றிய தகவல்கள் குறித்து எதுவும் தெரியாது -சஜின் வாஸ்

அரச சாட்சியாளர் பற்றிய தகவல்கள் குறித்து எதுவும் தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தன அரச தரப்பு சாட்சியாளராக வழக்குகளில் சாட்சியமளிப்பாளர் அண்மையில் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் சஜின் வாஸிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த போது,

என்னை அரச சாட்சியாளராக வழக்கு விசாரணைகளில் பயன்படுத்த உள்ளதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனினும் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

அரச தரப்பு சாட்சியாளராக மாறியிருந்தால் இவ்வாறு வழக்குகளில் முன்னிலையாக நேரிட்டிருக்காது.

லஞ்ச ஊழல் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணை ஒன்றில் முன்னிலையாகவே நான் இன்று நீதிமன்றம் வந்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டுக்கான சொத்து பொறுப்பு விபரங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுதொடர்பிலான விசாரணைளுக்காக சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றம் சென்றிருந்தார்.

இதேவேளை, சஜின் வாஸ் குணவர்தனவிற்கு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக கடந்த காலங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.