அரச பணியாளர்களது பணி நேரங்கள் சலுகையுடன் மாற்றம்..

அரசாங்க ஊழியர்களின் பணி நேரங்களில் மாற்றத்தினை மேற்கொள்ளும் பொருட்டும், அரச பணியாளர்கள் மத்தியில் வேலை நேரக்கொள்கை ஒன்றினை அமுல் செய்யப்படவுள்ளது..

முதற்கட்டமாக கொழும்பில் இந்த நெகிழ்வுத் தன்மையான வேலை நேரக்கொள்கை, அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்மாகாண பாரிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவை கோடிட்டு குறித்த இந்த செய்தியானது வெளியாகியுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் முதல், இந்த திட்டம் பரீட்சாத்த ரீதியில் அமுல் செய்யப்படவுள்ளது.

ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்ல பகுதியில் நிரந்தரமாக அமுல்செய்யப்படவுள்ளதுடன், கொழும்பின் பாரிய வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு அமைய அரசசேவையில் உள்ளவர்கள், காலை 7 மணியில் இருந்து 10 மணிவரைக்குள் கடமைகளுக்கு அழைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரையில் பணிகளை நிறைவு செய்ய முடியும்.

தற்போது அரச சேவையாளர்களின் பணிநேரம் காலை 8.30 முதல் மாலை 4.30 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது

எனினும் பணியாளர்கள் முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் கருமங்களில் ஈடுபட வேண்டும் என கோரப்பட்டுள்ளார்கள்

இந்தமுறையை கடைப்பிடிக்கும் வகையில் தனியார்துறையினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.