அரிசிக்கு பஞ்சம், விலை நிர்ணயத்தால் வந்த வினை

அரசிக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட நிலையில், நாடு முழுவதிலுமுள்ள பல பிரதேசங்களில், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தம்புளை, வவுனியா, காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலேயே, பெருமளவில் இந்தத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அம்மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் அரிசியும், நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படாமல், அதிகூடிய விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 80 ரூபாய், நாட்டரிரி ஒரு கிலோகிராம் 72 ரூபாய் மற்றும் பச்சையரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாய் என்ற அடிப்படையில், விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரிசியின் விலையைக் கட்டுப்பட்டில் வைத்திருப்பதற்காக, அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதிக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட போது, பல தரப்பினர், அதனூடாக பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று,  பொலன்னறுவை சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் அரிசியையும், இலங்கை அரிசி என்ற பெயரில், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும், இதற்காக, இறக்குமதி செய்யப்படும் அரிசி, இலங்கையில் தயாரிக்கப்படும் சாக்குப்பைகளில் பொதியிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், அரிசி இறக்குமதியை, தனியார் ஊடாக மேற்கொள்ளாது, அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்படுமாயின், இவ்வாறான மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும், அவ்வுரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.