அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சுயநலத்தின் முன் நல்லாட்சிக் கொள்கை மடிந்துபோயுள்ளதாக ஜே.வி.பி.நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி விமர்சித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புதிதாக ஒரு பகுதியை கட்டிக்கொள்ள 39 லட்சம் ரூபாவுக்கான மதிப்பீடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இதற்கான பணம் துறைமுக அதிகார சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் திருத்த நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிகாரத்துக்கு வருமுன் நல்லாட்சி பற்றி வாய்கிழிய பேசிய அர்ஜுன போன்றவர்கள் தற்போது அரசாங்கப் பணத்தில் இவ்வாறு வீண் விரயம் செய்வது நல்லாட்சிக் கொள்கையை கைவிட்டுள்ளதற்கான அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.