மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனது நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிணை, முறிகள் விற்பனையில் இடம்பெற்ற மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணை, முறிகள் விற்பனையில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விவாதம் நேற்று(25) நாடாளுமன்றில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மத்திய வங்கி பிணை, முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கின்றது. அந்த வகையில்தான் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மிகக்குறுகிய காலத்திற்குள் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனம் பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளது. மோசடி ஊடாக ஈட்ட ப்பட்ட பணத்தைத் தடை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தோம். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இந்தப் பணத்தை பயன்படுத்தி சொத்துக்கள் எதையும் கொள்வனவு செய்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கப்படும். இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.