அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடை…

(FASTNEWS|COLOMBO) – அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழுமையாக தடைவிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கீழ்சபையில் வாக்கெடுப்பு விடப்பட்டபோது மசோதாவுக்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியதனை தொடர்ந்து, இந்த மசோதா நேற்று முன்தினம் மேல்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் விழுந்தன.

இதன் மூலம், கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் கவர்னரான கெய் இவேவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா கையெழுத்தாகி சட்டமானால், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பாலியல் பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ, தவறான உறவின் மூலம் கருத்தரித்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

மேற்கூறிய காரணங்கள் தவிர வேறு எதற்காக கருக் கலைப்பு செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் டாக்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார்.