அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு..

போலியான ஆவணங்களை பயன்படுத்தி சூட்சகமான முறையில் யானைகளை விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கினை மீண்டும் டிசம்பர் மாதம் 05ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூன்று நீதியரசர்கள் கொண்ட விசேட மேல் நீதிமன்றமானது இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது நீதிபதிகளான, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளான சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரட்ன, சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோர் உள்ளடங்கிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு வழங்குவதற்கு காலம் தேவை என்று அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அதேநேரம் மேலும் 07 சாட்சியாளர்களை புதிதாக வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் ஆவணங்கள் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று பரிசீலிப்பதற்காக வழக்கை டிசம்பர் மாதம் 05ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.