அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பளித்து, சுதந்திரமாக தங்கள் தொழிலில் ஈடுபட வழியேற்படுத்தித் தருமாறு கடற்பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடற்பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் (மரைன் செக்கியூரிட்டி ஒபிசர்ஸ் யூனியன்) நேற்று(24) மாலை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆப்தீன், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் தமயந்தி என்பவர் கடற்பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளையும் அவண்ட் கார்ட் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனையடுத்து அவண்ட் கார்ட் நிறுவனம் அனைத்து தனியார் கடற்பாதுகாப்பு நிறுவனங்களையும் தனது நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யுமாறு கடிதம் அனுப்பியிருந்தது. ஒரு தனியார் நிறுவனம் இன்னொரு தனியார் நிறுவனத்தை தன் நிர்வாகத்தின்கீழ் செயற்படுமாறு நிர்ப்பந்தப்படுத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அவண்ட் கார்ட் நிறுவனத்தின்கீழ் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் எங்களுக்கு மாதாந்தம் 2800 டொலர்கள் வருமானம் கிடைத்த போதிலும், அவண்ட் கார்ட் நிறுவனம் எங்களுக்கு 900 டொலர்கள் மட்டுமே சம்பளமாக கொடுத்தது.
தற்போது நாங்கள் கடற்படையின் கீழ் எங்கள் தொழிலில் ஈடுபடுவதில் எதுவித தடையும் இல்லை. எனவே அவண்ட் கார்ட் தலையீடில்லாமல் இந்தநிலை நீடிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.