அவன்ட் கார்ட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பனவு செய்யவில்லை – ரக்னா லங்கா குற்றச்சாட்டு

அவன்ட் கார்ட் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுப்பனவு செய்யவில்லை என ரக்னா லங்கா நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனம் சுமார் 800 மில்லியன் ரூபா பணத்தை, ரக்னா லங்கா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.

செலுத்த வேண்டிய பணத்தை செலுத்துமாறு நேற்று ரக்னா லங்கா தலைவர், அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

பணம் செலுத்துவதனை புறக்கணித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என எழுத்து மூல கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும், இந்த விடயம் குறித்து சட்ட மாஅதிபர் மற்றும் நிதி அமைச்சு ஆகியனவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவனமும் அவன்ட் கார்ட் நிறுவனமும் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

செலுத்தப்பட வேண்டிய தொகையை பத்து தவணையில் செலுத்துவதாக அவன்ட் கார்ட் நிறுவனம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திட்ட உடன் 165 மில்லியன் செலுத்திய போதிலும் அதன் பின்னர் இதுவரையில் எந்த வித கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளவில்லை என ரக்னா லங்கா நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.