இலங்கை கிரிக்கெட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ள சுழல் பந்துவீச்சாளர் மலிந்த புஷ்பகுமார ஒருவேளை இந்தத் தொடரில் விளையாடாவிட்டால் அடுத்த தொடரில் விளையாடுவார் என இலங்கை அணித் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இடது கை சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமாரவின் முன்னேற்றம் மற்றும் இறுதி அணியில் அவரது வாய்ப்பு குறித்து ரங்கனவிடம் கேட்கப்பட்டது.
‘‘ஒவ்வொரு உள்ளூர் கிரிக்கெட் பருவகாலத்திலும் 50 விக்கட்களுக்கு மேல் கைப்பற்றுவதென்பது சிறப்பான விடயமாகும். மலிந்த புஷ்பகுமார கடந்த பத்து வருடங்களில் 500 க்கும் மேல் விக்கட்களை வீழ்த்தியுள்ளதன் மூலம் அவர் எத்தகைய திறமையான பந்து வீச்சாளர் என்பது புலனாகின்றது.
ஆனால் அவரைப் போன்றே நானும் இடது கை சுழல் பந்துவீச்சாளன். எனவே அணியின் சமநிலை குறித்து கவனம் செலுத்துவது அவசியம். ஒருவேளை இந்தத் தொடரில் அவர் விளையாடாவிட்டால் அடுத்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன்’’ என்றார்.
பங்களாதேசுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை வெற்றி வாய்ப்பு குறித்து ரங்கனவிடம் கேட்டபோது,
‘‘நாங்கள் ஓரணியாக முழுத் திறமையுடன் விளையாடினால் வெற்றி பெறுவோம். எமது துடுப்பாட்ட வீரர்கள் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்’’ என பதிலளித்தார்.
பங்களாதேசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் மார்ச் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பங்களாதேஷின் 100ஆவது டெஸ்ட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.