(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேசில்) – பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது.
அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரேசிலை சேர்ந்த 35 வயது கர்ப்பிணி ஒருவர் வலிப்பு நோய் காரணமாக கடந்த 10-ம் தேதி உயிரிழநதார். அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிறகே அவரது உயிர் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், மற்ற தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.