ஆசியக்கிண்ணப் போட்டிகளில் விளையாட வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்கு கொசுக் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் வங்கதேசம் சென்றுள்ளது.
சென்றுள்ள இடத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வரும் வீரர்கள் தற்போது கொசுக் கடியிலும் அவதிப்பட்டு வருகின்றனராம்.
டாக்காவில் பயிற்சி மேற்கொண்ட போதும் கொசுத் தொல்லையால் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு செய்ய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர் இந்திய வீரர்கள்.
ரெய்னா கூறுகையில், இங்கு கிட்டதட்ட 2 லட்சம் கொசுக்கள் இருப்பதாகவும், அவற்றால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் போன்றோர் பெரிய துண்டை எடுத்து உடல் முழுவதும் மூடியபடியே காணப்பட்டனர். அப்படியும் பல கொசுக்கள் அவர்களை விட்டு வைக்கவில்லையாம்.
மைதானங்களில் பிரகாசமான வெள்ளை விளக்குகள் போடப்படுவதால் கொசுக்கள், பூச்சிகள் அதிகம் வருகின்றன.
இவற்றை ஒழிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் டாக்கா மாநகராட்சி நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை என்று கூறப்படுகிறது.