(FASTGOSSIP| COLOMBO) – ஆசியாவின் அதிசயமாகிய கொழும்பு தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக் கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக செயற்றிட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான இந்த செயற்றிட்டம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர்களாகும்.
குறித்த கோபுரத்தின் கீழ்மட்ட மூன்று மாடிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள எட்டு மாடிகளில் இரண்டு மாடிகள் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தொலைத் தொடர்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாடியிலும் சுமார் 400 பேர் உள்ளடங்கக் கூடிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தில் 250 வாகனங்கள் நிறுத்துவதற்கான தரிப்பிட வசதிகளும் உள்ளன.
தொலைத்தொடர்பு நெறிப்படுத்தல் ஆணைக்குழுவின் கீழ் இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.