ஆசிய கிண்ண முதலாவது போட்டியில் வெற்றியை வசமாக்கியது இந்திய அணி

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் 45 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும், ஹார்திக் பாண்டியா 31 ஓட்டங்களும் பெற்றனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஷிகர் தவன் 2 ஓட்டங்களிலும், விராட் கோலி 8 ஓட்டங்களிலும், ரெய்னா 13 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 7.5 ஓவர்களில் 42 ஓட்டங்களிலும் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

பங்களாதேஷ் தரப்பில் அல்-அமீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சார்பாக சபீர் ரஹ்மான் 44 ஓட்டங்களை பெற்றதுடன், அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தியத் தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா 4 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறித்த போட்டியில், ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.