ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 23,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, வதந்தியெனவும் தேர்தலை நோக்காக கொண்டு இவ்வாறான ஒரு பொய்ப் பிரசார விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன், நேற்று (21) தெரிவித்தார்.
‘குறிப்பிட்ட மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு மட்டும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு வழங்க முடியாது.
மேலும், இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிலிருந்து எந்த ஒரு சுற்று நிரூபமும் இற்றை வரைக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமையானது தேர்தலை நோக்காக கொண்டு நடாத்தப்படும் காய்நகர்த்தல் மாத்திரமே.
இந்த செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.
மேலும், ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ளவர்கள், வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதுக்கு அமைய பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் தேர்தலுக்கு பின்னரே எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.
தேர்தல் விதிமுறைக்கமைய தற்போது நியமனங்கள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது’ எனவும் தெரிவித்தார்.
(riz)