இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட்டுடன் நடந்த வாக்குவாதம் குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் விளக்கம் அளித்துள்ளார்.
செயின்ட் லூசியாவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
குறித்த இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில் நின்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டை ஓரின சேர்க்கையாளருடன் ஒப்பிட்டு வாக்குவாதம் செய்தது சர்ச்சையாக கிளம்பியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.) நடத்தை விதியை மீறிய அவருக்கு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. போட்டி கட்டணத்தில் இருந்து 75% அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது கருத்துக்காக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டிடமும், குறித்த அணி வீரர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து கேப்ரியல் தெரிவிக்கையில்;
“.. நான் பயன்படுத்தியது மோசமான வார்த்தை என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் இது. இருவரிடையே நடந்த வார்த்தை பரிமாற்றம் என்ன என்பதை விளக்க வேண்டியது எனது கடமை.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், நான் பந்து வீச தயாரான போது என்னை உற்று பார்த்தார். இது உளவியல் சார்ந்த யுக்தியாக இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு இது வழக்கமானது தான். இதை அறிந்த நான் எனக்குள் இருந்த டென்ஷனை குறைத்துக் கொள்வதற்காக அவரை நோக்கி ‘என்னை பார்த்து ஏன் சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஆண்கள் என்றால் உங்களுக்கு இஷ்டமா?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘இந்த சொல்லை ஒருவரை அவமதிப்பதற்காக பயன்படுத்தாதே. ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’ என்று பதில் அளித்தார்.
அதற்கு நான் ‘அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறினேன்.
இந்த பிரச்சினைக்கு பிறகு நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஒரு அனுபவ பாடமாகும்..”
(ifA)