ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொலிசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஆப்கான் இராணுவத்தினருடன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் நவா மாவட்டத்தில் ஹெல்மண்ட் பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொலிசாரை குறிவைத்து தீவிரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.