ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதோடு, பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுப்ரீம் நீதிமன்றம் உள்ளது. நேற்று(07) மாலை 5 மணி அளவில் பணி முடிந்து ஊழியர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அப்போது நீதிமன்றிற்கு வெளியே வந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இதனால் சுப்ரீம் நீதிமன்றின் ஜன்னல்கள், கதவுகள், நொறுங்கின. ஆங்காங்கே கட்டிடங்கள் சிதறின.
அதைத் தொடர்ந்து பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர். இத்தாக்குதலில் 20 பேர் அதே இடத்தில் பலியாகினர்.
41 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இக்கொடூர தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கண்டனம் தெரிவித்துள்ளார். இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என தெரிவித்துள்ளார்.