ஆப்கான் பாராளுமன்ற தாக்குதல் குறித்து ஜனாதிபதி கண்டனம்

ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி இது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலாகும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் குடியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை இல்லாதொழிப்பது குறித்து அனைவரது பங்களிப்பு தொடர்பில்  ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

”பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு (SAARC) என்னும் வகையில் ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது மிகவும் வெறுக்கத்தக்கதொரு பயங்கரவாதச் செயலாகும் .

இவ்வாறான தாக்குதல்கள் நாட்டின் குடியுரிமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளாகும். அத்துடன் இவர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் இராணுவத்தினர் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் பின்வாங்க கூடாது.

பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக போராடி இன்று  அதனை வெற்றிகரமாக முற்றாக ஒழித்து விட்டு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இன்று நிம்மதியுடன் வாழ்கின்றோம். அவ்வகையில் பயங்கரவாதத்தின் வடுக்கள் வேதனைகள் என்ன என்பது பற்றி தௌிவாக அறிந்த நாடு என்ற வகையில், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்” எனவும் அந்த அறிக்கையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.