ஆப்கான் ராணுவ முகாமில் தற்கொலைத் தாக்குதல் – 33 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் கோஸ்த் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்மான் முகாமுக்கு அருகே உள்ள ராணுவச் சாவடியில் வெடிபொருள் நிரப்பிய கார் மூலம் இந்தத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆப்கன் படையினரும், வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளும் இங்கு முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோஸ்த் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முபாரெஸ் ஸத்ரான் நேற்று, கூறியதாவது:

சாப்மான் முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள், 27 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 12 குழந்தைகளும், 3 பெண்களும் அடங்குவர் என்றார் அவர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தலிபான் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் ஆப்கன் பிரதிநிதிகளுடன் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வாரம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலும், இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் கடந்த வார இறுதியில் ஆப்கானில் நிகழ்த்தப்பட்ட இரு சாலையோர வெடிகுண்டுத் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்கு தலிபான் பயங்கரவாதிகளே காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.
1,000 பொதுமக்கள் பலி: ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 1,000 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலியானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட இது மிக அதிகம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
2009-இல் தாக்குதல்: ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சாப்மான் முகாம், கடந்த 2009-ஆம் ஆண்டிலும் மோசமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானது நினைவுகூரத் தக்கது.

அப்போது அல்-காய்தா அமைப்பினர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வைச் சேர்ந்த 7 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

மற்றொரு சம்பவத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு சாப்மான் முகாமிலும், அருகிலுள்ள சாலெர்னோ ராணுவ முகாமிலும் நுழைந்து தாக்குதல் நிகழ்த்த முயன்ற 24 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

(riz)