அத்தியாவசியமற்ற உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து உணவு பொருட்களினதும் இறக்குமதியை தடை செய்வதற்கு தேசிய பொருளாதார பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறை போம்புவல சேவைக்கால பயிற்சி நிறுவனத்தின் விவசாய கண்காட்சியை நேற்று(25) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை வழங்கி அவர்களது பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் எமது பொருட்களுக்கு கூடுதல் பெறுமானம் வழங்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்காக தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அதற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்று நிருபங்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.