ஆவா குழு குறித்த மேலதிக தகவல்கள் இன்று வெளியிடப்படும் – அமைச்சர் ராஜித

ஆவா குழுவை  உருவாக்கியவர்கள் தொடர்பில்  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில், நாளைய தினம் (10ம் திகதி)  இன்னும் அதிகமான தகவல்கள்  எனக்கு கிடைக்கும்.  அப்போது நான் வெளிப்படுத்துவேன்.

ஆவா குழுவுடன் இராணுவம்  தொடர்புபட்டுள்ளதாக நான் கூறவில்லை. மாறாக கடந்த ஆட்சிக்காலத்தில்   முன்னாள் பாதுகாப்பு செயலாளரும்,  ஒரு சில இராணுவ அதிகாரிகளுமே ஆவா குழு உருவாக்கத்தில் தொடர்புபட்டிருந்ததாக நான் தெரிவித்திருந்தேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன  தெரிவித்திருந்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  நேற்று(09) நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்;

யுத்தம் செய்த இராணுவ வீரர்கள்  எதனை செய்தாலும்   அதனை  சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது.  வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு  யார்   விரும்புகிறார்களோ, அவர்களே ஆவா குழுவை உருவாக்கியிருப்பர்.

ஆனால் முன்னைய அரசாங்கத்தில் முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஒரு சில இராணுவ அதிகாரிகளுமே இந்தக் குழுவை உருவாக்கியதாக நான் குறிப்பிடுகின்றேன். எனது கூற்றை   முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மறுத்திருந்தார்.

ஆனால்  அனைத்தையும்  இராணுவ வீரர்கள் செய்தார்கள் என்று கூறிவிட்டு வெறுமனே இருந்துவிட முடியாது.  இராணுவ வீரர்கள் யுத்தம் செய்து நாட்டை மீட்டனர் என்பதற்காக அவர்கள் தவறு செய்திருந்தால் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.