ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் புரிந்த தவறை காலிறுதியில் செய்யமாட்டோம் – ஹாக்கி பயற்சியாளர்

ஹாக்கி உலக லீக் அரையிறுதியின் கடைசி லீக்கில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரேலியாவிடம் 2-6 என படுதோல்வியடைந்து ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்தது. இதனால் காலிறுதியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செய்த தவறை திரும்பவும் செய்யமாட்டோம் என்று பயிற்சியாளர் பால் வான் ஆஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘லீக் போட்டிகளில் நாம் கற்றதைக் கொண்டு காலிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த லீக் போட்டியில் கற்றுக்கொள்வதற்கு முக்கியமான விஷயங்கள் இருந்தன. நாம் சிறப்பாக விளையாடாதபோது விமர்சனங்களை பெற்றுதான் ஆக வேண்டும். இதை நாம் கட்டாயம் மறக்கக்கூடாது. ஆஸ்திரேலிய வீரர்கள் தொடக்கத்திலேயே இரண்டு கோல் அடித்து ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்கள பகுதியில் (பாதுகாப்பு ஆட்டம்) இன்னும் வலிமையாக செயல்பட்டு அதில் இருந்து விடுபட வேண்டும்’’ என்றார்.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ், போலந்து அணிகளை வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்திருந்தது. காலிறுதியில் மோத இருக்கும் மலேசியாவை, ஏற்கனவே இரண்டு மாத்திற்கு முன்பு நடந்த அஸ்லான் ஷா கோப்பைக்கான போட்டியில் இந்தியா 3-2 என வீழ்த்தியுள்ளது.