பர்மிங்காம்,ஜூன் 24 (டி.என்.எஸ்) பிரிட்டன் நாட்டின் பர்மிங்காமில் நகரில் வசித்து வரும் 16 வயதான உமர் அல் ஷெய்க், சிறுவயது முதல் ஏமி க்ரெஸ்வெல் என்ற பெண்ணை மனதுக்குள் காதலியாக பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லுகேமியா நோயால் உமர் பாதிக்கப்பட்டார். இதற்காக குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது உமருக்கு நோய் முற்றியுள்ளதும், அவரது மரணத்துக்கான நாள் நெருங்கி வருவதும் தெரியவந்தது.
மரணத்திற்கு முன் தனது காதலை ஏமியிடம் தெரிவிக்க விரும்பிய உமர், சிறுவயது முதல் மனதுக்குள் பூட்டி வைத்த காதலி நீ தான் என்று அவளிடம் கூறினார். மேலும், மரணத்துக்கு முன் உன்னை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் உமர் தெரிவித்தார். உமரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய துணிந்த 16 வயது ஏமி, தனது பெற்றோர் சம்மதத்துடன், உமரை திருமணம் செய்துக்கொண்டார்.
ஜூன் 19ஆம் தேதி மருத்துவமனையிலேயே மோதிரத்தை மாற்றி உமர் – எமி திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பின் காதல் தம்பதிகள் இனிமையான வார்த்தை பரிமாற்றங்களையும், வாழ்க்கையின் கடந்த கால நினைவுகளையும் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில் கடந்த 22ஆம் உமர் மரணத்தை தழுவினார்.