இங்கிலாந்து சுற்றிலிருந்து உமர் அக்மல் மற்றும் ஷெஜத் நீக்கம்

இந்தியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றியை (வங்காளதேசத்துக்கு எதிராக) மட்டும் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

இதேபோல் வங்காளதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 2 வெற்றி மட்டும் கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இங்கிலாந்து  செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உத்தேச பட்டியலில் இருந்து ஷெஜத், உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளனர்.

நடத்தை சிக்கல் காரணமாக ஷேஜாத், உமர் அக்மல் இருவரும் பயிற்சிக்காக அணியில் சேர்க்கப்படவில்லை என்று புதிய தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹாக் கூறியுள்ளார். அவர்களது நடத்தையும் சரியில்லை, ஆட்டத்திறனும் சீராக, ஈர்க்கும் வகையில் இல்லை என்று இன்சமாம் தெரிவித்தார்.

முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடத்தை சரியில்லாத உமர் அக்மலை அணியில் இருந்து நீக்கி தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.