இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புயல்…

இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல் தாக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஐரோப்பிய நாடுகளை அண்மித்த அட்லாண்டிக் கடல் பகுதியில் எலேனோர் என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் நேற்று(03) ஐரோப்பிய நாடுகளை தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்ஸ்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயங்கர சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியமையினால் பாரீஸ் நகரம் கடுமையான பாதிப்படைந்துள்ளதாகவும் ஈபிள் டவர் மூடப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அங்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இங்கிலாந்தில் மணிக்கு 147 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியமையினால் அந்த நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் லெங்க் என்ற இடத்தில் காற்றினால் ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சுவிஸ்லாந்தில் உள்ள லூசர்ன் நகரில் மிக அதிகமாக 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதனால் அங்கும் கடுமையான பாதிப்பு நிலவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் புயல் ஏற்பட்டதாகவும் அங்கு மோசமான பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்து மற்றும் பிரான்சில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.