இடியப்பச் சிக்கலில் பேஸ்புக் சமூக வலைத்தளம்

நியூயார்க், சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர் அமைப்புக்கு தனியாக பேஸ்புக் பக்கம் உள்ளது. இந்த பக்கத்தை கடந்த மாத நிலவரப்படி சுமார் 85 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவில் வலுக்கட்டாயமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என கருத்து தெரிவித்தமைக்காக இந்த அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத்தை இந்தியாவில் தோன்றாதவாறு பேஸ்புக் நிறுவனம் மறைத்து விட்டதாக குற்றம்சாட்டி கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசின் தூண்டுதலால் தான் எங்கள் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் பேஸ்புக் பக்கம் தொடர்பாக இந்திய அரசுக்கும், பேஸ்புக் நிர்வாகத்துக்கும் இடையில் நடைபெற்ற அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் வெளிப்படையாக அறிவிக்கும்படி பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள எங்கள் இயக்கத்தின் பேஸ்புக் பக்கம் விடுவிக்கப்பட வேண்டும்.

பேச்சு சுதந்திரம் மற்றும் நிறத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பாகுபாடு காட்டகூடாது என அமெரிக்க அரசு அளித்துள்ள அடிப்படை அரசியலமைப்பு உத்தரவாதத்தை மீறியுள்ள பேஸ்புக் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முடக்கப்பட்ட நீதிக்கான சீக்கியர் அமைப்பு பேஸ்புக் பக்கத்தை மீண்டும் விடுவிக்குமாறும் உத்தரவிட வேண்டும் என கோர்ட்டிடம் இந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக 21 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு பேஸ்புக் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.